இந்த அறிகுறிகள் தெரிந்தால் அசால்ட்டா இருக்காதீங்க.. எச்சரிக்கும் டாக்டர்... | Exclusive: On World Hypertension Day 2024 Doctor Shares Details About Hypertension - Tamil BoldSky
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த அறிகுறிகள் தெரிந்தால் அசால்ட்டா இருக்காதீங்க.. எச்சரிக்கும் டாக்டர்...

|

World Hypertension Day 2024: உயர் இரத்த அழுத்தம் என்பது உலகெங்கிலும் எண்ணற்ற நபர்களை பாதிக்கின்ற ஒரு மோசமான ஆரோக்கிய பிரச்சனை. காலப்போக்கில் இது அமைதியாக இரத்த நுண்குழாய்களுக்கும், முக்கியமான உடலுறுப்புகளுக்கும் தீங்கு விளைவித்து, கடுமையான உடல்நல பிரச்சனைகளுக்கான ஆபத்தை அதிகரித்துவிடும். அதுவும் இது இதய நோய், பக்கவாதம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் மே 17 ஆம் தேதி உலக ஹைப்பர்டென்சன் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. உயர் இரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு, அடையாரில் உள்ள எம்ஜிஎம் மலர் ஹெல்த் கேர் சென்டரின் உள் மருத்துவ பிரிவின் முதுநிலை நிபுணரான டாக்டர். V.ஜினாதாஸ் அவர்கள் உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன, அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் எந்த மாதிரியான உணவுகளை உண்ண வேண்டும், உண்ணக்கூடாது என்பது பற்றி தமிழ் போல்ட்ஸ்கையிடம் பகிர்ந்துள்ளார். அவை பின்வருமாறு:

Exclusive On World Hypertension Day 2024 Doctor Shares Details About Hypertension

உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன?

தமனிகளின்/இரத்தக்குழாய்களின் சுவர்களுக்கு எதிராக இரத்தத்தின் அழுத்தம் தொடர்ந்து அதிகமாக இருக்கும் போது உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதை கவனிக்காமல் விட்டுவிட்டால், அந்த தொடர்ச்சியான அழுத்தமானது, இதயத்தை பாதிக்கும் மற்றும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். தொடக்க நிலையில் உயர் இரத்த அழுத்தம் வெளிப்படையான அடையாளங்களையோ, அறிகுறிகளையோ வெளிப்படுத்தாத நிலையில், கார்டியாக் அரெஸ்ட், பக்கவாதம், சிறுநீரக பாதிப்புகள் போன்ற தீவிர பிரச்சனைகள் உருவாவதற்கான ஆபத்தை திடீரென்று அதிகரிக்கின்றன.

உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள்

உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் பொதுவாக நுட்பமானவை. இப்பிரச்சனையானது முற்றிய கட்டத்திற்கு செல்லும் வரை அல்லது கடும் சிக்கல்களை உருவாக்கும் வரை கண்டறியப்படாமலேயே இருக்கக்கூடும். உயர் இரத்த அழுத்தம் உள்ள நபர்களுள் சிலருக்கு ஒற்றைத் தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், தலைசுற்றலுடன் மயக்க உணர்வு, மார்பில் அசௌகரியம், வேகமான இதயத்துடிப்புகள் அல்லது மூக்கில் இரத்தக்கசிவு போன்ற அறிகுறிகள் ஏற்படக்கூடும். இந்த அறிகுறிகளை அனுபவித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

இருப்பினும், மேற்குறிப்பிடப்பட்ட அறிகுறிகள் உயர் இரத்த அழுத்தத்தினால் மட்டும் குறிப்பாக வருவதில்லை. வேறுபிற காரணங்களினாலும் இந்த அறிகுறிகள் தோன்றக்கூடும். எனவே, இதை கண்டறிவதற்கு உயர் இரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிப்பதும், திறம்பட அதை கையாள்வதும் முக்கியமானது.

உயர் இரத்த அழுத்தத்திற்கான காரணங்கள்

உயர் இரத்த அழுத்தத்திற்கான காரணம் பெரும்பாலும் பல்வேறு அம்சங்களை சார்ந்ததாக இருக்கக்கூடும் மற்றும் இது மரபணு சார்ந்த பரம்பரை பண்புகள், வாழ்க்கை முறை மற்றும் சூழலியல் அம்சங்கள் ஆகியவற்றின் கலவையாக இருக்கக்கூடும்.

ஆரோக்கியமற்ற உணவுகளை உள்ளடக்கிய மோசமான உணவுமுறை, உடற்செயல்பாடு, உடற்பயிற்சி இல்லாமை, அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்துதல், புகைப்பிடித்தல் போன்ற ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உயர் இரத்த அழுத்தம் வருவதற்கும், அதிகமாவதற்கும் கணிசமான பங்களிப்பை வழங்கக்கூடும். கூடுதலாக, வயது, மரபணுக்கள், அதிக உடல் எடை, சிறுநீரக நோய் மற்றும் நீரிழிவு போன்ற பிரச்சனைகள் மற்றும் நாள்பட்ட மனஅழுத்தம் போன்றவையும் உயர் இரத்த அழுத்தத்திற்கான ஆபத்தை அதிகரிக்கும்.

இரத்த அழுத்தத்தை சமாளித்து, வெற்றி காண்பதற்கான அத்தியாவசிய நடவடிக்கைகளுள் ஒன்று இதயத்திற்கு ஆரோக்கியமான உணவு திட்டத்தை பின்பற்றுவது. ஊட்டச்சத்து மிக்க உணவுகள் உயர் இரத்த அழுத்த அளவுகளை கட்டுப்படுத்துவதில் ஒரு முக்கிய பங்கு வகிப்பதுடன், உயர் இரத்த அழுத்தத்துடன் தொடர்புடைய பிரச்சனைகளின் அச்சுறுத்தலையும் குறைக்கும். இதற்கு மிகவும் பிரபலமான டயட்டான DASH டயட் திகழ்கிறது.

எந்த மாதிரியான உணவுகளை உண்ண வேண்டும் மற்றும் உண்ணக்கூடாது?

* குறைந்த அளவு உப்பு எடுத்துக் கொள்வது: சுத்திகரிக்கப்பட்ட உணவுகள், டின்னில் அடைக்கப்பட்ட சூப்புகள், கன்வீனியன்ஸ் உணவுகள் மற்றும் உப்பு சேர்க்கப்பட்ட கருவாடு, ஊறுகாய் போன்ற உப்பு அதிகமாக இருக்கின்ற உணவுகளை உண்பதை கட்டுப்படுத்தவும். புதிதாக சமைக்கப்பட்ட, சுத்திகரிக்கப்படாத முழு உணவுப்பொருட்களை தேர்வு செய்யவும்; உப்புக்குப் பதிலாக, சமைக்கும் உணவுகளுக்கு சுவையூட்ட இயற்கையான மூலிகைகள் மற்றும் சுவையூட்டிகளை பயன்படுத்தவும்.

* சாச்சுரேட்டட் மற்றும் ட்ரான்ஸ் கொழுப்புகளை குறைக்கவும்: எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், கொழுப்பு அதிகம் உள்ள இறைச்சிகள், கொழுப்பு நீக்கப்படாத பால் பொருட்கள், பேக்கரி தயாரிப்புகள் போன்ற சாச்சுரேட்டட் மற்றும் ட்ரான்ஸ் கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகளை மிகச்சிறிய அளவிலேயே எடுத்துக் கொள்ளவும். அவைகளுக்குப் பதிலாக, எளிய புரதம் மற்றும் குறைவான கொழுப்புள்ள பால் பொருட்களை எடுத்துக் கொள்ளலாம். அத்துடன். சமைத்த உணவுகள், பார்பிக்யூ உணவுகள் அல்லது ஆவியில் வேக வைத்த உணவுகள் போன்ற அதிக ஆரோக்கியமான உணவு தயாரிப்பு உத்திகளை பின்பற்றவும்.

* இதயத்திற்கு ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்யவும்: தினசரி உணவு திட்டத்தில், பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், மெல்லிய புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை சேர்த்துக் கொள்ளவும். ஊட்டச்சத்து நிறைந்த இந்த உணவுகள் உடலுக்கு அவசியமான வைட்டமின்களையும், தாதுக்களையும் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளையும் வழங்குவதுடன், பொதுவான இதய ஆரோக்கியத்தையும், நல்வாழ்வையும் தக்க வைக்க உதவுகின்றன.

* இயற்கை சர்க்கரை நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளவும்: சர்க்கரை மற்றும் அதிகம் சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளையும், பானங்களையும் மிக குறைவாக எடுத்துக் கொள்ளவும். சர்க்கரை சேர்த்த இனிப்புகளுக்குப் பதிலாக, தேன் அல்லது மேப்பிள் சிரப் போன்ற இயற்கையான சர்க்கரை அடங்கிய பொருட்களையும், சர்க்கரை சேர்க்காத முழு பழங்களையும் அதிகம் உட்கொள்ளவும்.

* மிதமான அளவில் மதுவை நுகரவும்: மதுபானம் அருந்துவது உங்களுக்கு வழக்கமாக இருக்குமானால், சிறிய அளவில் அதனை உட்கொள்ளவும். பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டல்களுக்கு ஏற்றவாறு உங்களது மது நுகர்வை கட்டுப்படுத்தவும்.

இறுதியாக கூற வேண்டுமானால், உயர் இரத்த அழுத்தம் என்பது, ஒரு ஆபத்தான உடல்நல பிரச்சனை; இதற்கு தீவிரமான கண்காணிப்பும் மற்றும் வாழ்க்கை வழிமுறையில் சில ஆரோக்கியமான மாற்றங்களும் தேவைப்படுகிறது.

இதய நோய்க்கான ஆபத்தைக் குறைக்கவும் மற்றும் அதிக இரத்த அழுத்தத்தினால் வரும் சிக்கல்களை தவிர்க்கவும் அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த வழிகாட்டல்களை நாம் நன்கு அறிந்திருக்க வேண்டும். மன அழுத்த மேலாண்மை மற்றும் மருத்துவ சிகிச்சையோடு சேர்த்து, தினசரி உடற்பயிற்சியை உள்ளடக்கிய ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையை முறையை நடத்துவது அவசியம்.

இது இதய ஆரோக்கியத்தை திறம்பட நிர்வகிக்கவும், வாழ்க்கைத் தரத்தை கணிசமாக மேம்படுத்தவும் உதவும். உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிப்பதற்கு அல்லது இதய ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கு உங்களுக்கு உதவி தேவைப்படுமானால், தயங்காது மருத்துவ நிபுணரை தன்முனைப்புடன் அணுகி ஆலோசனை பெறுவது சிறந்தது.

English summary

Exclusive: On World Hypertension Day 2024 Doctor Shares Details About Hypertension

World Hypertension Day 2024: In an interview with Tamil Boldsky, Dr. V. Jinadas MBBS, MD (Internal Medicine) Senior Consultant – Internal Medicine MGM Healthcare – Malar Adyar shares details about what is hypertension, its symptoms, causes and more. Read on to know..
Desktop Bottom Promotion