கணேசமூர்த்தி எம்.பி. மரணம்: கடைசி நாள்களில் மதிமுகவில் நடந்தது என்ன?

கணேசமூர்த்தி

பட மூலாதாரம், X

  • எழுதியவர், கலைவாணி பன்னீர்செல்வம்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த மதிமுகவைச் சேர்ந்த எம்.பி. கணேசமூர்த்தியின் உயிர் இருதய செயலிழப்பால் பிரிந்ததாக அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24-ம் தேதி தனது தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி, ஈரோட்டில் உள்ள சுதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எம்.பி. கணேசமூர்த்தி.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், அவரது இருதயத் துடிப்பு குறைந்தது. சுயநினைவு இழந்து வந்தார். இதையடுத்து கோவையில் உள்ள மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். செயற்கை இருதய நுரையீரல் செயல்பாடுகளுடன் அவர் சிகிச்சைப் பெற்று வந்தார்.

நான்கு நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், அவரது முக்கிய உடல் உறுப்புக்கள் சீராக செயல்படுவதில் சிக்கல் நீடித்தது. ரத்த அழுத்தம், அவ்வப்போது குறைந்து வந்தது. இதையடுத்து இன்று காலை 05.05 மணிக்கு இருதயம் செயலிழந்து உயிர்பிரிந்ததாக அவர் அனுமதிக்கப்பட்டிருந்த கே எம் சி எச் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

இது விஷமருந்தி தற்கொலை செய்த வழக்கு என்பதால், ஈரோடு போலீசாரிடம் உடற்கூராய்வுக்காக உடல் ஒப்படைக்கப்படுகிறது. அதன்பின், அவரது சொந்த ஊரான சென்னிமலை குமாரவலசுக்கு இறுதிச்சடங்குக்காக எடுத்துச் செல்லப்படுகிறது.

எம்.பி. கணேசமூர்த்தி உயிரிழப்பு

தேர்தலில் வாய்ப்பு தராத நிலையில் தற்கொலை முயற்சி

கோவையில் எம்.பி. கணேச மூர்த்தி அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைக்கு மார்ச் 24ஆம் தேதி வைகோ நேரில் சென்று பார்த்தார்.

இதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "தற்போதைய எம்.பி. தேர்தலுக்கு கட்சியில் அனைவரும் சேர்ந்து துரை வைகோவை (நாடாளுமன்றம்) அனுப்ப வேண்டும், கணேச மூர்த்திக்கு அடுத்த முறை வாய்ப்பு கொடுப்போம் என்றனர். நான் ஒப்புக்கொள்ளவில்லை. அதன் பின் ஓட்டெடுப்பு நடந்தது. 99% பேர் துரை வைகோவை நிறுத்த வேண்டும் என்றனர். இது கணேசமூர்த்தி வேண்டாம் என்பதற்காக அல்ல. 2 சீட்டுகளை வாங்கி ஒன்றை துரைக்கும் மற்றொன்றை கணேசமூர்த்திக்கும் கொடுக்கலாம் என்றனர். அதன்படியே செய்ய நினைத்தேன். அப்படியே வாய்ப்பு இல்லாமல் போனாலும், சட்டசபை தேர்தல் ஒரு வருடத்தில் வருகிறது. ஒரு நல்ல தொகுதியில் அவரை எம்எல்ஏ ஆக்கி விட்டு, அதன் பிறகு தளபதி ஸ்டாலினிடம் கூறி அதைவிட ஒரு பெரிய பதவியில் வாய்ப்பு வாங்கிக் கொடுக்கலாம் என்று இருந்தேன். அதற்குள் காயம் எல்லாம் ஆறிவிடும் என்றேன்.” எனக் கூறியிருந்தார்.

கல்லூரி நாட்களிலேயே வைகோவுடன் நட்பு

கணேசமூர்த்தி ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்து சென்னிமலை குமாரவலசு பகுதியை பூர்வீகமாக கொண்டவர்.

1947 ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி பிறந்தார். அவரது தந்தையின் பெயர் அவிநாசி கவுண்டர் தாயார் சாரதாம்பாள். இவருக்கு பாலாமணி என்று மனைவி இருந்தார்.

விவசாயத்தை பூர்வீகமாக கொண்ட போதும் தியாகராயர் கல்லூரி பிஏ பயின்றவர் சென்னையில் சட்டப்படிப்பு படித்தவர். தியாகராயர் கல்லூரியில் பயிலும்போதிருந்தே மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கும், கணேசமூர்த்திக்கு நல்ல நட்பு ஏற்படத் தொடங்கியது.

பள்ளி நாட்களிலேயே திமுகவில் தன்னை இணைத்துக் கொண்ட கணேசமூர்த்தி அக்கட்சியில் மாநில மாணவர் அணி இணை அமைப்பாளர் ஆனார். பேரறிஞர் அண்ணாவை அடிக்கடி சந்தித்துப் பேசுமளவு நெருங்கிப் பழகிய அபிமானியாக வலம் வந்தார்.

1976-ல் அவசரநிலை காலத்தில் தலைவர்களை கைது செய்த சிறையில் அடைத்த போது மாணவர் திமுக சார்பில் தீவிரமாகப் பணியாற்றியதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள் . 1984 இல் இந்திய அரசியல் சட்ட ஆட்சி மொழி பிரிவு இணைப்பு போராட்டத்தில் கைதாகி அவர் சிறை சென்றார்.

எம்.பி. கணேசமூர்த்தி உயிரிழப்பு

பட மூலாதாரம், Getty Images

மாவட்ட திமுக செயலாளராக இருந்த அவர், மொடக்குறிச்சி எம்எல்ஏவாக 1989-இல் தேர்வு செய்யப்பட்டார். அப்போது பதவிக்கு வந்த 2 ஆண்டுகளிலேயே 2 கால்நடை மருத்துவமனைகள், 3 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஒரு வேளாண் கிடங்கு ஆகியவற்றை தொடங்க முயற்சிகளை மேற்கொண்டார்.

1991 கீழ்பவானி பாசன பகுதிகள் புஞ்சை பாசனத்திற்கு தண்ணீர் விடும் போது, நஞ்சை பயிர் செய்தால் தண்டத் தீர்வை விதிக்கப்பட்டு வந்தது. அந்த தண்டத் தீர்வையை நீக்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டதாக இவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

1993-ல் திமுகவில் இருந்து வைகோ வெளியேறிமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கியபோது துணையாக உடன் வெளியேறியவர். அப்போதிருந்து பலர் பேர் வெவ்வேறு கட்சிகளுக்கு சென்ற பின்பும், வைகோவை விட்டும், மதிமுகவை விட்டும் கணேசமூர்த்தி விலகவில்லை.

1998ல் பழனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். 2009 -லும் அவர் எம்பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 தேர்தலில் தோல்வி அடைந்த போதும் 2019 ஆம் ஆண்டில் மீண்டும் எம்பி பதவியை கைப்பற்றினார்.

முக்கியத் தலைவர்களைச் சந்திக்கும்போதெல்லாம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தன்னுடன் கணேசமூர்த்தியைத்தான் அழைத்துச் செல்வார். வைகோ உள்ளிட்ட மதிமுகவைச் சேர்ந்த அனைவருமே தேர்தலில் தோல்வியுற்றபோதும், மதிமுக சார்பில் வெற்றி பெற்றுக் காட்டியவர் கணேசமூர்த்தி. அக்கட்சியின் பொருளாளராகவும் பதவி வகித்தார்.

எம்.பி. கணேசமூர்த்தி உயிரிழப்பு

பட மூலாதாரம், ANI

2002ல் பொடா சட்டத்தில் தனது ஈரோடு இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்ட கணேசமூர்த்தி, 555 நாட்கள் சிறையில் இருந்தார்.

இவர் மதிமுக அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் தலைமை ஏற்று பொதுப்பணிகள் ஆற்றினாலும் அவற்றில் பெரும்பாலானவை விவசாயிகளுக்கான பிரச்னையாகவே இருந்தது.

உரவிலை உயர்வை ரத்து செய்ய வேண்டும், கரும்பின் ஆதார விலை நிர்ணயம், பல்வேறு மாவட்ட விவசாயிகளை ஒன்றாக ஒருங்கிணைத்து போராடுவது, முல்லைப் பெரியாறு அணை உரிமை காத்தல், அட்டப்பாடியில் தடுப்பணை கட்ட எதிர்ப்பு, முழு மதுவிலக்கு, கெயில் எரிவாயு குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு, நியூட்ரினோ திட்ட எதிர்ப்பு என பல போராட்டங்களிலும் ஈடுபட்டார் கணேசமூர்த்தி.

தேசிய விவசாய கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு மூலம் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய உரிய ஆணை பெற்று தரப்பட்டதில் இவரது பங்கும் உண்டு.

வைகோ

வைகோ தனது இரங்கல் பேட்டியில் கூறியது என்ன?

"எம்பி சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி தற்கொலை செய்து கொண்டார் என்பதை ஒரு சதவிகிதம் கூட நான் நம்ப மாட்டேன்," என வைகோ கூறியுள்ளார்.

கணேசமூர்த்தி மறைவிற்கு செல்ல, கோவை வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமான நிலையத்தில் பேட்டியளித்தார்.

"சட்டமன்ற தேர்தலில் உரிய இடம் கொடுக்கப்படும் என அவரிடம் தெரிவிக்க பட்டு இருந்தது. அப்பொழுது இரு சீட் கொடுத்தால் பரிசீலனை செய்யுங்கள், என்று என்னிடம் கூறி இருந்தார், ஒன்று மட்டும் கொடுத்தால் துரை நிற்கட்டும் என்று சொல்லி இருந்தார்." என்றார் வைகோ.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)