"கண்முன் ஒரே மகன்... அந்த நிகழ்வின்போதே உடைஞ்சிட்டார்!" - கோட்டா சீனிவாசராவ் குறித்து ராஜேந்திரன்

"இப்ப ஓய்வுல இருக்கிற போதும் சினிமா வாய்ப்புகள் அவரைத் தேடிப் போயிட்டுதான் இருக்கறதாகச் சொல்றாங்க. வீட்லயே ஷூட் பண்ணிடலாம்னு சொல்லியெல்லாம் அவரை சிலர் கூப்பிட்டதாகவும் கேள்விப்பட்டேன்." - ராஜேந்திரன்

Published:Updated:
கோட்டா சீனிவாசராவ்
கோட்டா சீனிவாசராவ் ( File Photo )
0Comments
Share
"நாலு போலிஸ் ஸ்டேஷன்ல நாப்பது போலீசைக் கன்ட்ரோல் பண்ற உனக்கே திமிரு இருந்தா, எட்டு மாவட்டத்துல 92 எம்.எல்.ஏ.,16 எம்.பி.யை வச்சுக்கிட்டு கவர்மென்டையே கன்ட்ரோல் பண்ணுகிற எனக்கு எவ்வளவு திமிரு இருக்கும்" என `சாமி'யில் விக்ரமுடன் மல்லுக்கு நின்றவர் கோட்டா சீனிவாச ராவ். `கோ' படத்திலும் அரசியல்வாதி கேரக்டரில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

நேற்று தெலங்கானாவில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐதராபாத் பூத் ஒன்றில் உதவியாளர் ஒருவர் கைதாங்கலாக அழைத்து வர வாக்குச்சாவடிக்கு வந்து இவர் ஓட்டுப் போட்ட வீடியோ வெளியாகி வைரலாகியது.

81 வயதான இவர், வயோதிகம் காரணமாகச் சமீப சில ஆண்டுகளாக நடிப்பை விட்டு விலகி வீட்டில் ஓய்வெடுத்து வருகிற சூழலில், வயதான சூழலிலும் ஜனநாயகக் கடமையாற்ற வந்ததைப் பார்த்துப் பலரும் பாராட்டினர். அதே வேளை, 'எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே' என அவருக்காக வருத்தமும் அடைந்தனர்.

தமிழில் கோட்டா சீனிவாசராவ் நடித்த அத்தனை படங்களிலும் அவருக்கு டப்பிங் குரல் கொடுத்தது நடிகர் ராஜேந்திரன். அவரிடம் பேசினோம்.

"நானுமே அவர் ஓட்டு போட வந்த வீடியோ பார்த்தேன். கொஞ்ச நேரம் கூடத் தொடர்ந்து நிற்க முடியாதபடியாக இருந்த அவர் உடல்நிலை ரொம்பவே வருத்தப்பட வெச்சது. அவர்கூடப் பேசிய, பழகிய நாள்கள் இப்பவும் கண்முன் அப்படியே இருக்கு. 'சாமி' படத்துக்காகத்தான் அவருக்கு நான் முதன் முதல்ல டப்பிங் பேசினேன். என்னுடைய வாய்ஸ் ரொம்பவே பொருந்திடுச்சுன்னு சொன்னார். தொடர்ந்து தமிழ்ல்ல அவர் நடிச்ச எல்லாப் படங்களுக்கும் நான்தான் டப்பிங் பேசினேன். தமிழ்ல சுமார் இருபது படங்கள் வரை பண்ணியிருப்பார்ன்னு நினைக்கிறேன்.

நேரடித் தமிழ்ப்படமா இல்லாம தெலுங்குல எடுத்து தமிழ்ல டப்பிங் செய்யப்பட்டா, அப்பவும் நான்தான் பேசணும்னு அக்ரிமென்ட்லயே அதைச் சேர்த்துடுவார். ஆள் பார்க்கத்தான் டெரர், ஆனா பழகினா அவ்வளவு நல்ல மனுஷன்!

அரசியல்ல எம்.எல்.ஏ. பதவியிலெல்லாம் இருந்திருக்கார்னாலும் எளிமையாகத்தான் இருப்பார். எனக்குத் தெரிஞ்சு அவர் கண் முன்னாடியே அவரோட ஒரே மகனின் மரணம் நிகழ்ந்ததுல இருந்து அவர் மனசளவுல ரொம்பவே பாதிக்கப்பட்டுவிட்டார்.

பையன் ஸ்போர்ட்ஸ் பைக் கேட்டதும் வெளிநாட்டுல இருந்து வாங்கிக் கொடுத்தார். புது வண்டி எடுத்ததும் குடும்பமே சேர்ந்து ஒரு ஹோட்டலுக்கு பார்ட்டிக்குப் போனாங்க. கோட்டா மத்தவங்க கூட கார்ல போக, பையன் காருக்கு முன்னாடி பைக்ல போயிருக்கார். அப்பதான் நொடிப்பொழுதுல அந்த விபத்து. வேன் ஒண்ணு பைக்ல மோதியதுல கோட்டாவின் மகன் ஸ்பாட் அவுட்.

பின்னாடி போன்ல பேசும் போதும் பையன் பத்தியே நிறையப் பேசிட்டிருப்பார். பணம், புகழ், பதவின்னு என்னதான் இருந்தாலும் நான் இருக்கும்போது அவன் போயிட்டானேன்னு பையனை நினைச்சே வருத்தப்படுவார். நான்கூட பேச்சைத் திசை திருப்பி விட்டிருக்கேன். ஆனாலும் அந்தச் சம்பவத்துல இருந்தே அவருக்கு உடல்லயும் தெம்பு குறைஞ்சிடுச்சுனு நினைக்கிறேன்.

ராஜேந்திரன்
ராஜேந்திரன்

இப்ப ஓய்வுல இருக்கிற போதும் சினிமா வாய்ப்புகள் அவரைத் தேடிப் போயிட்டுதான் இருக்கறதாகச் சொல்றாங்க. வீட்லயே ஷூட் பண்ணிடலாம்னு சொல்லியெல்லாம் அவரை சிலர் கூப்பிட்டதாகவும் கேள்விப்பட்டேன்.

ஜூலை மாசம் அவருக்குப் பிறந்த நாள் வரும். ஒவ்வொரு வருஷமும் அன்னைக்கு நான் அவரிடம் மறக்காமல் பேசிடுவேன். கடந்த வருஷமும் பிறந்த நாள் அன்னைக்குப் போன் பண்ணிப் பேசினேன். எனக்குத் தெலுங்கும் தெரியும்கிறதால தெலுங்குலயும் பேசுவோம். பேசறப்ப தமிழ் சினிமா பத்தி ரொம்ப விசாரிப்பார்.

இந்த வருஷம் வரும் பிறந்த நாளுக்கும் பேசணும். 'மெட்ராஸ்ல இருந்து எனக்கு போன் வருதுன்னா அது உங்ககிட்ட இருந்துதான்னு உடனே கண்டுபிடிச்சுடுவேன்'னு சொல்லிச் சிரிப்பார்" என்கிறார் ராஜேந்திரன்.